உரிமைகோரல்கள் உள்ளவர்களுக்கான வழிகாட்டி

உதவிசெய்வதற்காகவே நாங்கள் இருக்கிறோம். வேலையில் ஒருவருக்கு ஊறு/வலி அல்லது நலமின்மை ஒன்று ஏற்பட்டால், ஊதிய-இழப்பு நிவாரணங்கள், மருத்துவக் காப்புறுதி ஆகியவற்றை மிகவும் விரைவாக வழங்குவதுடன், வேலைக்கு அந்த நபர் திரும்பிச்செல்வதற்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம். எங்களின் இணையச் சேவைகள் ஊடாக  உங்களுடைய உரிமைகோரல் தொடர்பான அடிப்படைத் தகவல்களை எந்த நேரத்திலும் நீங்கள் விரைவாக அணுகுவதையும் நாங்கள் எளிதாக்குகிறோம். அத்துடன்,  தொலைபேசி அழைப்புகள் மற்றும் சந்திப்புக்களுக்கு இலவசமான நிபுணத்துவ உரைபெயர்ப்புக்களையும் உங்களுக்கு நாங்கள் வழங்க முடியும், அத்துடன் உங்களுக்குத் தேவைப்பட்டால், உங்களின் மொழியில் கடிதங்கள் மொழிபெயர்க்கப்படவும் நாங்கள் ஒழுங்குசெய்ய முடியும்.

இந்த வழிகாட்டியில் நாங்கள் வழங்கும் நிவாரணங்கள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்கள் உள்ளன. ஆரோக்கியப் பராமரிப்பு, வருமானத்துக்கான பிரதியீடு மற்றும் வேலைக்குத் திரும்பிச்செல்வதற்கான சேவைகள் ஆகியவற்றை இவை உள்ளடக்குகின்றன. உரிமைகோரல் ஒன்றை நீங்கள் சமர்ப்பித்த பின்னர், தீர்மானங்கள் மற்றும் உங்களின் பொறுப்புகள் பற்றிய தகவல்கள் தொடர்பாக உங்களுடன் நாங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பது பற்றிய, அதாவது எங்களின் இணையச் சேவைகள் பற்றிய தகவல்களும் இதில் உள்ளன.

உங்களுக்குக் கிடைக்கக்கூடிய நிவாரணங்கள், சேவைகள் மற்றும் பொறுப்புக்கள் எல்லாவற்றையும் இந்த ஆவணம் பட்டியலிடவில்லை. எங்களுக்குத் தெரிந்தவரையில் WSIB பற்றி பலருக்கு இருக்கும் கேள்விகளுக்கான பதில்களின் சுருக்கமாக இது உள்ளது. WSIBஇன் தீர்மானங்கள் இந்த ஆவணத்தின் அடிப்படையிலானவையல்ல. பணியிடப் பாதுகாப்பு மற்றும் காப்புறுதிச் சட்டம் (WSIA) மற்றும் எங்களின் கொள்கைகளின்  அடிப்படையிலானவையாக அவை இருக்கின்றன. உங்களின் உரிமைகோரலைப் பற்றித் தீர்மானிக்கும்போது, உங்களிடமிருந்தும், உங்களின் வேலைவழங்குநரிடமிருந்தும், உங்களின் ஆரோக்கியப் பராமரிப்பு வழங்குநரிடமிருந்தும் நாங்கள் பெறும் தகவல்களை எப்போதும் நாங்கள் கருத்திலெடுக்கிறோம்.

நிவாரணங்கள் மற்றும் சேவைகள்: நாங்கள் எப்படி உங்களுக்கு உதவலாம்?

நீங்கள் சமர்ப்பித்த உரிமைகோரல் ஒன்று அங்கீகரிக்கப்பட்ட பின்னர் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய நிவாரணங்கள் மற்றும் சேவைகள் இவைதான். நீங்கள் வேலைக்குச் செல்லாமல் இருக்கவில்லை என்றாலும்கூட, ஆரோக்கியப் பராமரிப்பு நிவாரணங்கள் உங்களுக்குக் கிடைக்கலாம். இணையச் சேவைகளுக்கு நீங்கள் பதிவு செய்திருந்தால், உங்களுக்குப் பொருத்தமான நிவாரணங்கள் மற்றும் சேவைகளை நீங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கும்ம்.

ஆரோக்கியப் பராமரிப்பு 

வேலையுடன் தொடர்பான ஊறு/வலி/ அல்லது நலமின்மையிலிருந்து நீங்கள் மீட்சியடைவதற்கு உதவுவதற்காகவே நாங்கள் இருக்கிறோம். உங்களுக்குக் காப்புறுதி இருந்தாலும், உங்களின் உரிமைகோரல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட ஆரோக்கியப் பராமரிப்புச் செலவுகள் அனைத்தையும் நாங்கள் செலுத்துகிறோம். உங்களுக்குக் கிடைக்கக்கூடிய நிவாரணங்கள் உங்களின் ஊறு/வலி/ அல்லது நலமின்மையின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்ததாக இருக்கும்.

ஆரோக்கியப் பராமரிப்பு நிவாரணங்கள்

 • ஆரோக்கியப் பராமரிப்பு நிவாரணங்கள் உள்ளடக்குபவை: 
  • உங்களின் ஆரோக்கிய நிபுணரிடம் (உ+ம். மருத்துவர், பல் மருத்துவர்) இருந்து பெற்றுக்கொள்ளும் சிகிச்சை 
  • அவசரகால சிகிச்சை மற்றும் சத்திரசிகிச்சை உள்ளடங்கலாக மருத்துவமனை அனுமதி
  • பரிந்துரைக்கப்படும் மருந்துகள்
  • செயற்கையான உடல் பாகங்கள் (prosthetics) அல்லது எலும்புடன் தொடர்பான செயற்கைச் சாதனங்கள் (orthotics)
  • நியாயமான போக்குவரத்து மற்றும் அனுசரணைகளுக்கான செலவுகள்
  • பாரதூரமான பாதிப்புக்களுள்ள பணியாளர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு உதவும் உதவியாளர்கள் அல்லது பிற நடவடிக்கைகள்.
 • பெரும்பாலான ஆரோக்கியச் சிகிச்சைகள் மற்றும் தொடர்புடைய அனுசரணைகளுக்கு WSIB இன் முன் அனுமதி தேவை.
 • சேவைகளுக்காக உங்களின் ஆரோக்கிய வழங்குநருக்கு நாங்கள் நேரடியாக பணம் செலுத்தக்கூடும். உங்களின் வேலையுடன் தொடர்பான ஊறு/வலி/ அல்லது நலமின்மைக்கான சேவை எதற்கும் பணம்செலுத்துமாறு ஆரோக்கியப் பராமரிப்பு வழங்குநர் ஒருவர் உங்களைக் கோரமுடியாது.
 • உங்களின் உரிமைகோரல் உளவியல்ரீதியான ஒரு நிலைமையாக இருக்காவிட்டாலும்கூட, உங்களின் மீட்சிக்கும் வேலைக்குத் திரும்பிச்செல்லலுக்கும் உதவுவதற்காக உளவியல்ரீதியான சிகிச்சைக்கு நாங்கள் பணம் செலுத்தக்கூடும்.
 • உங்களின் உரிமைகோரல் அங்கீகரிக்கப்படவில்லை எனில், ஆரோக்கியப் பராமரிப்புக்காக நீங்கள் பணம்செலுத்த வேண்டியிருக்கும், அதன்பின் பணத்தைத் திருப்பித் தருமாறு எங்களிடம் நீங்கள் கேட்கலாம். ஆரோக்கியப் பராமரிப்புச் சேவை அனைத்தும் காப்புறுதி செய்யப்பட்டவை அல்ல,  அத்துடன் உங்களின் உரிமைகோரல் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே பணத்தை மீளப்பெறுவதற்கான தகுதி உங்களுக்கு இருக்கும்.

ஆரோக்கியப் பராமரிப்புக்கான உபகரணங்கள் மற்றும் பொருள்கள் 

 • ஆரோக்கியப் பராமரிப்புக்கான உபகரணங்களை அல்லது பொருள்களை உங்களின் ஆரோக்கியப் பராமரிப்பு வழங்குநர் பரிந்துரைத்திருப்பதுடன், நாங்களும் அவற்றை அங்கீகரித்திருக்கிறோம் என்றால், உபகரணங்களுக்கு நாங்கள் பணம் செலுத்துவோம். இது பின்வருவனவற்றை உள்ளடக்கலாம்:
  • செயற்பாட்டை அல்லது நல்வாழ்வை முன்னேற்ற உதவும் சாதனங்கள் (உ+ம்., walkers)
  • வலியைக் குறைப்பதற்காக அல்லது செயல்பாட்டை வினைத்திறனாகச் செய்வதற்காக அணியும் சாதனங்கள் (braces) மற்றும் ஆதரவுகள் 
  • ஏனைய மருத்துவப் பொருள்கள் (உ+ம்., புண்களைப் பராமரிப்தற்கான பொருள்கள்)
  • தேவைக்கேற்றவறு சரிசெய்யக்கூடிய படுக்கை சட்டங்கள் மற்றும் மெத்தைகள்.
 • அங்கீகரிக்கப்பட்ட ஆரோக்கியப் பராமரிப்பு உபகரண வழங்குநர்களுக்கான தெரிவுகள் உங்களுக்கு வழங்கப்படும்.

வேலைக்குச் திரும்பிச்செல்வதற்கு உதவும் சேவைகள் 

வேலைக்கு நீங்கள் திரும்பிச்செல்வதற்குத் தேவையான தீர்வுகளைக் கண்டறிவதில் உங்களுக்கும் உங்களின் வேலைவழங்குநருக்கும் உதவுவதற்காக, வேலைக்குத் திரும்பிச்செல்வதற்கு உதவுவதில் விசேடத்துவம் பெற்ற நிபுணர்களின் குழு எங்களிடம் உள்ளது. பின்வருவன எங்கள் பங்காக உள்ளன:

வேலைக்குச் திரும்பிச்செல்வதற்கு உதவும் சேவைகள் 

 • உங்களுக்குத் தேவையான அனுசரணைகள் உள்ளடங்கலாக, பாதுகாப்பாகவும் பொருத்தமான நேரத்திலும் வேலைக்கு நீங்கள் திரும்பிச்செல்வது பற்றிப் பேசுவதற்காக, உங்களையும் உங்களின் வேலைவழங்குநரையும் சந்தித்தல்.
 • நீங்கள் விளங்கிக்கொள்வதற்கு உதவும் தகவல்களை வழங்கல்:
  • வேலைக்குத் திரும்பிச்செல்லும் செயல்முறையின்போது எதிர்பார்க்கக்கூடியவை
  • உங்களிடமும் உங்களின் வேலைவழங்குநரிடமும் எதிர்பார்க்கப்படுபவை
  • உங்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள்
  • உதவி கேட்கக்கூடியவர்கள்
 • தேவைப்பட்டால், உங்களின் வேலையிடத்தை மதிப்பிடுவதற்காக வேலைத் தளத்துக்கு வருகைகள், எந்தவகையான வேலை உங்களுக்குப் பொருத்தமானது என்பதைத் தீர்மானிப்பதற்காக மதிப்பீடு ஒன்றை ஒழுங்கு செய்தல் மற்றும்/அல்லது நீங்கள் பாதுகாப்பாகப் பணிபுரிவதற்காக உங்களுடனும் உங்களின் வேலைவழங்குநருடனும் இணைந்துசெயற்படல் உள்ளடங்கலாக உங்களையும் உங்களின் வேலைவழங்குநரையும் விசேட சேவைகளுடன் தொடர்புபடுத்தல்.
 • சில சந்தர்ப்பங்களில், உங்களின் தற்போதைய வேலைவழங்குநரிடம் அல்லது புதிய வேலைவழங்குநரிடம் (பொருத்தமாயின்) வேலைக்குத் திரும்பிச்செல்வதற்கு உதவும் திறன்களை நீங்கள் வளர்த்துக் கொள்வதற்கான மீள்பயிற்சித் திட்டமொன்றை நாங்கள் பரிந்துரைக்கக்கூடும்.

வருமானத்துக்கான பிரதியீடு 

உங்களின் வேலையுடன் தொடர்பான ஊறு/வலி/ அல்லது நலமின்மையின் காரணமாக வருமானத்தை நீங்கள் இழந்திருந்தால், வருமானத்தை ஈடுசெய்யும் நிவாரணங்களை நாங்கள் வழங்குவோம்.

வருமான இழப்பு நிவாரணம்

 • உங்களின் வேலையுடன் தொடர்பான ஊறு/வலி/ அல்லது நலமின்மையின் காரணமாக உங்களால் வேலை செய்ய முடியாமலுள்ளது அல்லது குறைந்த ஊதியத்தில் மட்டுமே நீங்கள் பாதுகாப்பாக வேலைக்குத் திரும்பிச்செல்லக் கூடியவராக இருக்கிறீர்கள் என்று நாங்கள் தீர்மானித்தால், உங்களின் ஊறு/வலி/ அல்லது நலமின்மைக்கு முதல்  நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்ற ஊதியத்தின் 85 சதவீதம்வரை உங்களுக்கு நாங்கள் வழங்கக்கூடும். 
 • ஒரு வருடத்தில் நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச வருமான இழப்பு நிவாரணங்களுக்கு ஒரு எல்லையுள்ளது. விடய மேலாளர் ஒருவர் இந்த விபரங்களை உங்களுக்கு வழங்க முடியும்

ஓய்வுகால வருமான இழப்பு நிவாரணம்

 • ஓய்வுகால வருமான இழப்பு நிவாரணங்களுக்கான தகுதியைப் பெறுவதற்கு:
  •  உங்களின் வேலையுடன் தொடர்பான ஊறு/வலி/ அல்லது நலமின்மையின்போது நீங்கள் 64 வயதுக்கு உட்பட்டவராக இருந்திருக்கவேண்டும்; அத்துடன்
  • குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குத் தொடர்ச்சியாக வருமான இழப்பு நிவாரணங்களை நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.
 • உங்களுக்குத் தகுதியிருந்தால், உங்களுக்கு 65 வயதாகும்போது, இழந்த ஓய்வுக்கால வருமானத்துடன், ஓய்வுக்கால வருமான இழப்பு நிவாரணங்களை இழப்பீடாக உங்களுக்கு நாங்கள் வழங்கக்கூடும். உங்களுக்கு 65 வயதாகும்முன், உங்களின் வருமான இழப்பு நிவாரணங்களின் ஒரு பகுதியை ஓய்வுக்கால வருமான இழப்பு நிவாரணங்களுக்கு ஒதுக்குவதை நீங்கள் தெரிவு செய்யக்கூடியதாக இருக்கலாம்.

ஏனைய நிவாரணங்கள்

உங்களுக்கும் உங்களில் தங்கியிருப்பவர்களுக்கும் பொருளாதாரமல்லாத இழப்பு மற்றும் உயிர்பிழைத்திருப்பவர்களுக்கான நிவாரணங்களும் கிடைக்கக்கூடும்.

பொருளாதாரமல்லாத இழப்புக்கான நிவாரணங்கள்

 • உங்களின் வேலையுடன் தொடர்பான ஊறு/வலி/ அல்லது நலமின்மை நிரந்தரமான பாதிப்பொன்றுக்குக் காரணமாக இருந்தால், உடல்ரீதியான, செயல்பாட்டுரீதியான அல்லது உளவியல்ரீதியான பாதிப்புக்கான இழப்பீட்டை  உங்களுக்கு நாங்கள் வழங்கக்கூடும்.
 • உங்களுக்கான இழப்பீட்டுத் தொகை உங்களின் பாதிப்பு மற்றும் வயதின் அடிப்படையில் இருக்கும்.
 • உங்களின் பாதிப்பின் அளவைத் தீர்மானிப்பதற்காக, WSIB ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆரோக்கியப் பராமரிப்பு வழங்குநர் ஒருவரால் நீங்கள் பரிசோதிக்கப்பட வேண்டியிருக்கலாம்.
 • அந்தப் பரிசோதனையில் நீங்கள் கலந்துகொள்வதால் உங்களுக்கு ஏற்படும் பயணச் செலவுகள் அல்லது ஊதிய இழப்புக்களை நாங்கள் திருப்பிச் செலுத்தக்கூடும்.

உயிர்பிழைத்திருப்பவர்களுக்கான/தங்கிவாழ்பவர்களுக்கான நிவாரணங்கள்

 • வேலையுடன் தொடர்பான ஊறு/வலி/ அல்லது நலமின்மையால் இறந்தவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் அல்லது இறந்தவர்களில் தங்கிவாழ்பவர்களுக்கு பின்வருவனவற்றுக்கான தகுதியிருக்கக்கூடும்:
  • உயிர் பிழைத்திருப்பவர்களுக்கான கொடுப்பனவுகள் (ஒட்டுமொத்மாக  மற்றும் மாதாந்தம் )
  • இறுதிச் சடங்கு மற்றும் போக்குவரத்துச் செலவுகள்
  • இழப்புக்கான/கையறுநிலைக்கான (bereavement) ஆற்றுப்படுத்தல் கவுன்சலிங்
  •  மீண்டும் வேலைசெய்ய விரும்பும் வாழ்க்கைத் துணைகளுக்கான ஆதரவு

தீர்மானமெடுத்தல்

உங்களின் உரிமைகோரல் காலம் முழுவதும், உங்களின் மீட்சி மற்றும் பாதுகாப்பாக வேலைக்குத் திரும்பிச்செல்லலுக்கு ஆதரவுவழங்கும் தீர்மானங்களை நாங்கள் எடுப்போம். உங்களின் உரிமைகோரலுக்கென ஒதுக்கப்பட்ட WSIB பணியாளர்(கள்) ஒவ்வொரு கட்டத்திலும் உங்களை அதில் சம்பந்தப்படுத்துவார்கள். பின்வரும் தெரிவுகளும் உங்களுக்கு உள்ளன:

 • உங்களின் உரிமைகோரல் தொடர்பான தகவல்களை இணையத்தில் பார்த்தல் – உங்களின் உரிமைகோரலின் நிலை, சமீபத்திய கொடுப்பனவுகள், அங்கீகரிக்கப்பட்ட நிவாரணங்கள் மற்றும் பொருத்தமாயின், மேன்முறையீட்டின் நிலை ஆகியவற்றைப் பார்ப்பதற்கு, wsib.ca இல், எங்களின் பாதுகாப்பான இணையச் சேவைகளுக்கு நீங்கள் பதிவுசெய்யலாம்.
 • தீர்மானங்களை எழுத்தில் பெற்றுக்கொள்ளல்– எங்களின் தீர்மானங்களை எழுத்தில் விளங்கப்படுத்துவதுடன், நாங்கள் எதற்காக அந்தத் தீர்மானத்தை / தீர்மானங்களை எடுத்தோம் என்பதற்கான காரணங்களையும் நாங்கள் கூறுவோம். தகுதி மற்றும் ஆரோக்கியப் பராமரிப்பு பற்றிய தீர்மானங்களை உதாரணங்கள் உள்ளடக்குகின்றன. 
 • உங்களின் உரிமைகோரல் கோப்புக்கான அணுகல் – உங்களின் உரிமைகோரல் கோப்பின் எண்ணிமப் பிரதியைக் கட்டணம் எதுவுமில்லாமல் பெறுவதற்கு உங்களுக்குத் தகுதி உள்ளது. எழுத்துமூலம் நீங்கள் எங்களிடம் கோரவேண்டும். விரைவான சேவைக்கு,

Worker Request for copy of claim file (உரிமைகோரல் கோப்புக்கான பிரதிக்குப் பணியாளர் கோருதல்)

ஒன்றைப் பூர்த்திசெய்யுங்கள் அத்துடன், இந்தப் படிவத்தை நேரடியாக உங்கள் கோப்பில் சமர்ப்பிப்பதற்கு எங்களின்  இணையச் சேவைகளுக்குள் உள்நுழையுங்கள். தபால் அல்லது தொலைநகல் மூலமாகவும் உங்களின் கோப்பினை நீங்கள் கோரலாம். தகவல்கள் மற்றும் பாதுகாப்புப் பற்றிய சுதந்திரம் மற்றும்  தனியுரிமைச் சட்டத்தின் (FIPPA) கீழ், WSIB ஆல் சேகரிக்கப்படும் உங்களின் தனிப்பட்ட தகவல்களுக்கான உரிமை உங்களுக்கு உள்ளது.

 • ஒரு பிரதிநிதியைத் தெரிந்தெடுங்கள் – உங்களின் உரிமைகோரலின்போது உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நீங்கள் ஒருவரைத் தெரிவு செய்யலாம். இது ஒரு முறைசாரா பிரதிநிதியாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட  பிரதிநிதியாகவோ இருக்கலாம். முறைசாரா பிரதிநிதிகள் என்பது உங்களுக்கு ஆதரவளிப்பதுடன் உங்களின் உரிமைகோரலைப் பற்றிய வாய்மொழி அறிவிப்புகளைப் பெறும் ஒரு நண்பராக அல்லது குடும்ப உறுப்பினராக இருக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் Law Society Act இன் கீழ் உரிமம் பெற்றவர்களாக அல்லது அந்தச் சட்டத்தின் கடப்பாடுகளிருந்து விலக்குப் பெற்றவர்களாக இருப்பார்கள். அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் வாய்மொழிரீதியான அல்லது எழுத்துமூலமான தகவல்களைப் பெறக்கூடும் (உ+ம்., உங்களின் உரிமைகோரல் கோப்பின் பிரதிகள்) அத்துடன் மேன்முறையீட்டுச் செயல்பாட்டின் போது உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடும்.
 • மீள்பரிசீலனை அல்லது மேன்முறையீட்டு முடிவுகள்– உங்களின் உரிமைகோரலைப் பற்றி முடிவெடுக்கும்போது கிடைக்கின்ற அனைத்துத் தகவல்களையும் நாங்கள் கவனமாகக் கருத்திலெடுக்கிறோம். சில சமயங்களில் புதிய அல்லது விடுபட்ட தகவல்கள் கிடைக்கின்றன என்பதையும் தகவலொன்றை மீண்டும் பார்க்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம் என்பதையும் நாங்கள் விளங்கிக்கொள்கிறோம். இப்படியான நிலை உங்களுக்கும் இருந்தால், முன்னைய தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யும்படி நீங்கள் எங்களைக் கேட்கலாம். பதில் கிடைத்தபின்பும் உங்களுக்குத் திருப்தியில்லை என்றால், முறைசார் மேன்முறையீடு ஒன்றை நீங்கள் தாக்கல் செய்யலாம். தீர்மானமொன்று தொடர்பாக மேன்முறையீடு செய்வதற்கு நீங்கள் திட்டமிட்டால், அது வேலைக்குத் திரும்பிச்செல்வது தொடர்பான தீர்மானமெனில் 30 நாட்களுக்குள்ளும் ஏனையவை தொடர்பானதெனில் ஆறு மாதத்துக்குள்ளும் எழுத்துமூலமாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். விரைவான சேவைகளுக்காக, உங்களின் உரிமம்கோரலுக்கு

ஆட்சேபிக்க உத்தேசிக்கும் படிவம் (Intent to Object form) ஒன்றைச்

சமர்ப்பிப்பதற்கு எங்களின் இணையச் சேவைகளுக்குள் நீங்கள் log in செய்யலாம், அல்லது தபால் அல்லது தொலைநகல் மூலமும் நீங்கள் எங்களுக்குத் தெரியப்படுத்தலாம்.

உங்களின் மேன்முறையீடு குறித்த எங்களின் தீர்மானம் உங்களுக்கு அதிருப்தியைத் தந்தால், தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யும்படி பணியிடப் பாதுகாப்பு மற்றும் காப்புறுதி மேன்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை (WSIAT) நீங்கள் கேட்கலாம். WSIAT என்பது தனித்த மற்றும் சுயாதீனமான தீர்ப்பு வழங்கும் ஒரு அமைப்பாகும்.

பொறுப்புகள்: உங்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?

உங்களுக்குத் தேவையான ஆரோக்கியப் பராமரிப்பு மற்றும் நிதி உதவியை முடிந்தளவு விரைவில் உங்களுக்குப் பெற்றுத்தர நாங்கள் விரும்புகிறோம். இதைச் செய்வதற்கு, எங்களுக்கு உங்களின் உதவி தேவை. உரிமையைக் கோரும்போது அல்லது நிவாரணங்களைப் பெறும்போது உங்களுக்குச் சில பொறுப்புகள் உள்ளன.

எங்களின் இணையச் சேவைகளைப் பயன்படுத்தினால், இந்தப் பொறுப்புகளைப் பூர்த்திசெய்வது உங்களுக்குச் சுலபமாக இருக்கக்கூடும். உங்களின் உரிமைகோரல் நிலையைப் பார்க்கவும், நேரடி வைப்புக்கான உங்களின் விபரங்களைத் தரவும், உங்களுக்கான நிவாரணங்கள் மற்றும் கொடுப்பனவுத் தகவல்களைச் சரிபார்க்கவும் எங்களின் பாதுகாப்பான <a data-entity-substitution=">online services account (இணையச் சேவைக் கணக்கு) இல் நீங்கள் பதிவு செய்யலாம். உங்களின் மருத்துவச் சந்திப்புகளுக்குச் செல்லவும் பின் அங்கிருந்து வீட்டுக்குச் செல்லவும் WSIBஆல் முன்-அங்கீகரிக்கப்பட்ட ஒரு ரக்ஸியை முன்பதிவு செய்யலாம் மற்றும், உங்களின் மேன்முறையீட்டின் நிலையைக் கண்காணிக்கலாம், ஆவணங்களை நேரடியாகவே உங்களின் கோப்புக்குச் சமர்ப்பிக்கலாம் அத்துடன் எங்களுக்கு செய்திகளை அனுப்பலாம், இவை யாவற்றையும் வசதியான ஒரு இடத்திலிருந்து நீங்கள் செய்யமுடியும். தொடங்குவதற்கு, உங்களின் உரிமைகோரல் இலக்கம் மற்றும் தனிப்பட்ட அடையாள இலக்கம் தேவைப்படும், உங்களிடம் தனிப்பட்ட அடையாள இலக்கம் இல்லையென்றால், தயவுசெய்து எங்களை அழையுங்கள், நாங்கள் அதைப் பாதுகாப்பாக மின்னஞ்சல் செய்யலாம் அல்லது உங்களுக்குத் தபாலில் அனுப்பலாம்.

தகவல்களைப் பகிருங்கள்

 • உங்களின் ஊறு/வலி/ அல்லது நலமின்மை பற்றி WSIB க்கு அறிவியுங்கள் –ஊறு/வலி/ அல்லது நலமின்மை பற்றிய பணியாளரின் அறிக்கை ஒன்றை (படிவம் 6) நீங்கள் பூர்த்திசெய்ய வேண்டும். எங்களின் வலைத்தளத்தைப் பயன்படுத்தி பூர்த்திசெய்த படிவத்தை நீங்கள் சமர்ப்பிக்கலாம். உங்களின் ஊறு/வலி/நலமின்மை ஏற்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அல்லது வேலையுடன் தொடர்பான நலமின்மை கண்டறியப்பட்ட ஆறு மாதத்தின் பின்னர் உங்களின் உரிமைகோரலை நீங்கள் தாக்கல்செய்ய வேண்டும். இந்தப் படிவத்தைப் பூர்த்திசெய்யாவிடில், உங்களின் ஊறு/வலி/நலமின்மைக்குப் பின்பான இரண்டு வாரங்கள்வரை மட்டுமே வருமானத்துக்கான பிரதியீடு உங்களுக்குக் கிடைக்கும். உங்களின் படிவத்தைப் பூர்த்திசெய்து நீங்கள் கையொப்பமிடும்போது, உங்களின் செயல்பாட்டுத் திறன்கள் பற்றிய தகவல்களை WSIBக்கும் உங்களின் வேலைவழங்குநருக்கும் வழங்குவதற்கும் உங்களுக்கு சிகிச்சையளிக்கும் ஆரோக்கிய நிபுணர்களுக்கு நீங்கள் அங்கீகாரம் வழங்குகிறீர்கள்
 • உங்களின் ஊறு/வலி/ அல்லது நலமின்மை பற்றி உங்களின் வேலைவழங்குநருக்குக் கூறுங்கள்– நீங்கள் மீட்சியடைவதற்கும், வேலைக்குத் திரும்பிச்செல்வதற்கும் உதவுவதில் உங்களின் வேலைவழங்குநர் முக்கிய பங்கு வகிக்கிறார். வேலையுடன் தொடர்பான ஊறு/வலி/நலமின்மை உங்களுக்கு ஏற்படும்போது, அதை உங்களின் வேலைவழங்குநருக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும். பொதுவாக, உங்களின் ஊறு/வலி/ அல்லது நலமின்மை மற்றும் தொடர்புடைய ஆரோக்கியப் பராமரிப்புப் பற்றிய அடிப்படைத் தகவல்களை உங்களின் வேலைவழங்குநருடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடும். தீர்மானங்கள் தொடர்பாக நாங்கள் உங்களுக்கு வழங்கும் கடிதங்களின் பிரதிகளையும் உங்களின் வேலைவழங்குநருக்கு நாங்கள் அனுப்பக்கூடும்.
 • உங்களின் வேலைவழங்குநர் கோரும்போது, பூர்த்திசெய்யப்பட்ட

செயல்பாட்டுத் திறன்கள் படிவம்  ஒன்றைக் கொடுங்கள்.

 – உங்களின் செயல்பாட்டுத் திறன்கள் மற்றும் எல்லைப்பாடுகளைப் பற்றி உங்களின் வேலைவழங்குநருக்குத் தெரிவிப்பதற்காக, சிகிச்சைவழங்கும் ஆரோக்கியப் பராமரிப்பு நிபுணர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்துகின்றனர். நீங்கள் பாதுகாப்பாக வேலைக்குத் திரும்பிச்செல்வது பற்றித் திட்டமிடும்போது இது முக்கியமானது.

 • உங்களின் உரிமைகோரலைப் பற்றிய தீர்மானங்களை எடுப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் வழங்குங்கள் – உங்களின் ஊறு/வலி/ அல்லது நலமின்மை எப்படி ஏற்பட்டது என்பது பற்றிய தகவல்கள், உங்களின் ஆரோக்கியப் பராமரிப்பு பற்றிய தகவல்கள் மற்றும் நீங்கள் வேலைக்குத் திரும்பிச்செல்வது பற்றிய தகவல்கள் போன்றவற்றை உங்களிடம் நாங்கள் கேட்கக்கூடும். உங்களின் உரிமைகோரலைப் பற்றிய தீர்மானங்களை எடுப்பதற்கும், உங்களின் மீட்சி மற்றும் வேலைக்கு நீங்கள் திரும்பிச்செல்லல் என்பவற்றுக்கு ஆதரவளிப்பதற்கும் WSIBக்குத் தேவைப்படும் தகவல்களை நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். உங்களிடம் உரிமைகோரல் இலக்கம் கிடைத்ததும், உங்களின் உரிமைகோரல் கோப்பில் நேரடியாக  ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக எங்களின்  இணையச் சேவைகளுக்கு  நீங்கள் பதிவு செய்யலாம்
 • சூழலில் ஏற்படும் தொடர்பான மாற்றங்களை அறிவியுங்கள்– நிவாரணங்கள் மற்றும் சேவைகளுக்கான உங்களின் உரிமத்தைப் பாதிக்கக்கூடிய மாற்றங்கள் பற்றி நீங்கள் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உங்களின் ஊறு/வலி/ அல்லது நலமின்மையில் ஏற்படும் மாற்றங்கள், வேறு ஏதாவது வருமானம் உங்களுக்குக் கிடைத்தல் (உ+ம்., வலுவிழந்தோருக்கான நிவாரணங்கள்) அல்லது உங்களுக்கு வேலை இல்லாமல் போதல் என்பன இதில் அடங்கலாம். மாற்றம் ஏற்பட்ட 10 நாள்காட்டி நாட்களுக்குள் அந்த மாற்றத்தைப் பற்றி நீங்கள் தெரிவிக்க வேண்டும். உங்களின் உரிமைகோரல் கோப்பில் நேரடியாக  ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் இந்த மாற்றங்களைப் பற்றித் தெரிவிப்பதற்கு எங்களின்  இணையச் சேவைகளை  நீங்கள் பயன்படுத்தலாம்.

நடைமுறைகளில் பங்கெடுங்கள்

 • ஆரோக்கியப் பராமரிப்புச் சந்திப்புக்களின்போது ஒத்துழையுங்கள்– உங்களின் மீட்சிக்கு உதவ, திட்டமிடப்பட்ட ஆரோக்கியப் பராமரிப்பு சந்திப்புகள் மற்றும் பரிசோதிப்புக்கள் அனைத்துக்கும் நீங்கள் சமூகமளிக்க வேண்டும். உங்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கான ஆரோக்கியப் பராமரிப்பு நிபுணரை/நிபுணர்களைத் தெரிந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது. WSIB ஆல் தெரிந்தெடுக்கப்பட்ட மற்றும் கட்டணம்செலுத்தப்பட்ட ஆரோக்கியப் பராமரிப்பு நிபுணர்களாலும் நீங்கள் பரிசோதிக்கப்பட வேண்டியிருக்கலாம்.
 • வேலைக்குத் திரும்பிச்செல்லும் திட்டம் மற்றும் செயற்பாடுகளில் ஒத்துழையுங்கள்– பாதுகாப்பான மற்றும் பொருத்தமான வேலைக்கு நீங்கள் திரும்பிச்செல்வதற்கு உதவும் திட்டமொன்றை உருவாக்குவதற்காக, WSIB உடனும் உங்களின் வேலைவழங்குநருடனும் நீங்கள் இணைந்து செயல்பட வேண்டும். உங்களின்  மீட்சி மற்றும் செயல்பாட்டு திறன்கள் பற்றிய இற்றைப்படுத்தல்களை உங்களின் வேலைவழங்குநருக்குத் தொடர்ந்து வழங்குதல் என்பது இதன் கருத்தாகும்.
  • ஒருவரையொருவர் நாங்கள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துவது அனைவருக்கும் நல்லது. அதனால்தான் எங்களின் பணியாளர்களுக்கும் நாங்கள் சேவைசெய்யும் மக்களுக்கும் நடத்தை  தொடர்பான நெறிமுறைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்களின் பணியாளர்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நாங்கள் எதிர்பார்க்கும் நடத்தைகளைப்  பற்றி மேலும் அறியுங்கள்.
  • வேலைக்கு நீங்கள் திரும்பிச்செல்வது தொடர்பான சந்திப்புக்களில் WSIB உங்களை அழைக்கும்போது பங்கேற்பதையும் இது குறிக்கிறது. உங்களின் ஊறு/வலி அல்லது நலமின்மையின் தீவிரம் காரணமாக நீங்கள் ஒரு புதிய தொழிலைக் கருத்தில்கொள்ள வேண்டியிருந்தால், உங்களின் புதிய வேலைக்குத் தயாராவதற்கான திட்டமொன்றை உருவாக்குவதற்கு நாங்கள் உங்களுக்கு உதவுவதற்காக, மதிப்பீடு ஒன்றில் பங்கேற்குமாறு உங்களை நாங்கள் கேட்போம்.  

மேலதிக ஆதாரவளங்கள்: மேலதிக தகவல்களை எங்கே கண்டறிவது

உங்களின் உரிமைகோரலைப் பற்றி உங்களிடம் கேள்விகள் இருந்தால் அல்லது அது பற்றிய தகவல்கள் தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களை அழையுங்கள். யாரைத் தொடர்புகொள்வது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், திங்கள் முதல் வெள்ளி வரை (காலை 7:30 முதல் மாலை 5 மணிவரை) 1-800-387-0750 என்ற இலக்கத்தில் எங்களை அழைத்து,  உங்களின் உரிமைகோரலைப் பற்றி நன்குதெரிந்த வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி ஒருவருடன் பேசுங்கள். நாங்கள் உங்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்வதற்கு உதவுவதற்காக, முடிந்தால், தயவுசெய்து உங்களின் உரிமைகோரல் இலக்கத்தை வழங்குங்கள்.

இந்த வழிகாட்டியிலும் ஏனைய இற்றைப்படுத்தல்களிலும் உள்ள தகவல்களைப் பற்றிய மேலதிக விபரங்களைக் கண்டறிவதற்கு எங்களின் வலைத்தளத்தின் ஏனைய பகுதிகளை நீங்கள் பார்வையிடலாம். Twitter இலும் எங்களை நீங்கள் பின்தொடரலாம்.

உங்களின் உரிமைகோரல் தொடர்பான தகவல்களை எந்த நேரத்திலும் அணுகுவதற்கு இணையச் சேவைகள் கணக்கொன்றுக்குப் பதிவு செய்வது பற்றி மேலும் அறிவதற்கு wsib.ca/myclaim ஐப் பார்வையிடுங்கள்.

Fair Practices Commission (நியாயமான நடைமுறைகள் ஆணையம்) என்பது WSIB தொடர்பான புகார்களை விசாரிக்கும் (ombudsman) நிறுவனமாகும். WSIB இலிருந்து பெற்றுக்கொள்ளும் சேவையின் அல்லது சிகிச்சையின் பக்கசார்பற்றதன்மை குறித்த கரிசனையுள்ள ஊறு/வலி/நலமின்மை உள்ளவர்கள், வேலைவழங்குநர்கள் மற்றும் சேவைவழங்குநர்களுக்கான சுயாதீனமான, நடுநிலையான மற்றும் ரகசிய சேவையை இந்த ஆணையம் வழங்குகிறது. மேலதிக தகவல்களை www.fairpractices.on.ca என்ற வலைத்தளத்தில் அல்லது 416-603-3010 என்ற இலக்கத்தில் அல்லது கட்டணமற்ற இலக்கமான 1-866-258-4383 இல் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்

பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் அலுவலகம்  (OWA) என்பது ஒன்ராறியோப் பணியாளர் அமைச்சகத்தின் ஒரு சுயாதீன நிறுவனமாகும், வேலையுடன் தொடர்பான ஊறு/வலி மற்றும் நலமின்மையால் பாதிக்கப்பட்ட தொழிற்சங்கமற்றவர்களுக்கும், அவர்களில் தங்கியிருக்கும் குடும்பத்தவர்களுக்கும் பணியிடக் காப்புறுதிச் சேவைகளை இது வழங்குகிறது. மேலதிக தகவல்களை www.owa.gov.on.ca என்ற வலைத்தளத்தில் அல்லது1-800-435-8980 (ஆங்கிலம்) என்ற இலக்கத்தையோ அல்லது 1-800-661-6365 (பிரெஞ்சு) என்ற இலக்கத்தையோ அழைப்பதன்மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்

இந்த வழிகாட்டியின் ஒரு பதிப்பு வணிகங்களுக்கும் கிடைக்கிறது.  உங்களின் வழிகாட்டி: சேவைகள் மற்றும் பொறுப்புகள் – வணிகப் பதிப்பு..